Archive for the ‘புலிகள் அமைப்பு’ Category

விடுதலைப் புலிகள் ஆதரவும், எதிர்ப்பும்!

ஜூன் 22, 2010

விடுதலைப் புலிகள் ஆதரவும், எதிர்ப்பும்!

ஈ-மெயிலில் வந்த புலிகள் ஆதரவு!

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=22852

செம்மொழி மாநாடு: விடுதலைப்புலிகள் திடீர் ஆதரவு: உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டை, தமிழக அரசியலில் இருந்து பிரித்துப் பார்க்க விரும்புகிறோம். தமிழ் மொழியின் வளர்ச்சிக்கும், இனத்தின் ஒற்றுமைக்கும் செம்மொழி மாநாடு உறுதுணையாக இருக்கும் என்பதால், அதனை வரவேற்கிறோம்; மாநாடு சிறப்பாக நடக்க வாழ்த்துகிறோம்’ என விடுதலைப்புலிகள் அமைப்பினர், “இ-மெயில்’ கடிதம் மூலம் தெரிவித்துள்ளனர்.

இலங்கையில் இறுதிகட்டப் போரில், விடுதலைப்புலிகள் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டுள்ளனர் என இலங்கை ராணுவம் அறிவித்துள்ளது. ஆனால், விடுதலைப்புலிகளின் பெயரால், வெளிநாடுகளில் இருந்து, பல்வேறு அறிக்கைகள் வந்தவண்ணம் உள்ளன. “இராமு. சுபன், இணைப்பாளர், தலைமைச் செயலகம், தமிழீழ விடுதலைப் புலிகள், தமிழீழம்’ என்ற பெயரில், தமிழக அரசிற்கு, “இ-மெயில்’ மூலம் கடிதம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது. “தலைவர்/துணைத்தலைவர்கள், தலைமைக்குழு, உலகத் தமிழ் செம்மொழி மாநாடு, தமிழ்நாடு’ என முகவரியிடப்பட்ட அந்த கடிதத்தின், தலைப்பில், ” உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டைத் தமிழக அரசியலில் இருந்து பிரித்துப் பார்க்க விரும்புகிறோம்’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஐந்து பக்கங்களைக் கொண்ட அந்த கடித விபரம்: முன்னர் நடந்து வந்த உலகத் தமிழராய்ச்சி மாநாட்டிற்கு வலுச் சேர்க்கும் வகையில், இந்த ஆண்டு, தமிழக அரசு, உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டை நடத்த முன்வந்துள்ளது. முள்ளிவாய்க்காலில் ஈழத்தமிழ் மக்கள் சந்தித்த பேரிழப்பின் வலி குறையும்முன், உலகத் தமிழ் செம்மொழி மாநாடு நடப்பதை உலகத் தமிழர்கள் விரும்பவில்லை. அதனால், மாநாட்டைப் புறக்கணிக்கும் வேண்டுகோளை பல அமைப்புகள் விடுத்தன. எம் மக்களின் இந்த உணர்வு நியாயமானதே, என்பதைச் சான்றோர்கள் புரிந்து கொள்ள வேண்டும். மொழியே ஒரு தேசிய இனத்தை அடையாளப்படுத்துகிறது. தமிழரின் தேசிய அடையாளத்தைத் தமிழ் மொழியே குறிக்கிறது. கடந்த 1974ம் ஆண்டு தமிழீழத்தில் நடந்த நான்காவது உலகத் தமிழாராட்சி மாநாட்டில், எம்மக்கள் தமது உயிரையே காணிக்கையாக்கினர். செம்மொழி மாநாடு நடப்பது பல வழிகளிலும், தமிழ்மொழியின் வளர்ச்சிக்கு ஆக்கமும், ஊக்கமும், பெருமையும், வளமும் அளிக்கும் என மனதார நம்புகிறோம்.

ஒரு மொழியின் வளர்ச்சி, அம்மொழியின் தொன்மை தொடர்பானது மட்டுமே அன்று. எதிர்கால பயன்பாட்டிற்கு, அது எந்த அளவு உதவப் போகிறது என்பதுதான், ஒரு மொழியின் வளர்ச்சியைத் தீர்மானிக்கிறது. இவை காரணமாக உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டை, தமிழக அரசியலில் இருந்து பிரித்துப் பார்க்க விரும்புகிறோம். போர்ச்சூழலுக்கு மத்தியிலும், எங்களது இயக்கம் தமிழ்மொழியின் மேம்பாட்டுக்கு கடுமையாகப் பாடுபட்டுள்ளது. குழந்தைகள், புலிகள் அமைப்பின் உறுப்பினரின் பெயர்கள்; போர்ப்பயிற்சி கட்டளைகள்; அங்காடிகளின் பெயர்ப்பலகைகள் என அனைத்திலும் தமிழில் கொண்டு வர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.

ஈழ மக்களின் துன்பத்தைத் துடைத்து, அவர்கள் நல்வாழ்விற்கும், பாதுகாப்பிற்கும் உத்தரவாதத்தை உலகளவில் பெற்றுக் கொடுக்கும் பணி எல்லாத் தமிழருக்குமுண்டு. இன்று மிக முக்கியமான காலகட்டத்தில், இந்த செம்மொழி மாநாடு நடைபெறுகிறது. தமிழ் மொழியின் எதிர்கால வளர்ச்சிக்காக நடத்தப்படவிருக்கும் செம்மொழி மாநாட்டிற்கு, எம் ஆதரவு என்றும் உண்டு. அதேவேளை, ஈழத்தமிழினம் இலங்கையில் படும் இன்னல்களைக் களைவதுடன், அம்மக்களுக்கு நீதியைப் பெற்றுக் கொடுக்கும் பொறுப்பு இச்செம்மொழி மாநாட்டை நடத்துபவர்களுக்கு உண்டு. இவ்வாறு நடந்தால், செம்மொழி மாநாடு தனது குறிக்கோளைத் திறம்பட அடைந்ததாக, அனைத்துத் தமிழர்களாலும் ஏற்றுக் கொள்ளப்படும். தமிழ் மொழியின் வளர்ச்சிக்கும், எம்மினத்தின் ஒற்றுமைக்கும் செம்மொழி மாநாடு உறுதுணையாக இருக்கும் என நம்புவதுடன், மாநாடு சிறப்பாக நடக்க வாழ்த்துகிறோம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

– நமது சிறப்பு நிருபர்-நன்றி-தினமலர்

LTTE-support-though-email-semmozhi-conference

LTTE-support-though-email-semmozhi-conference

கருணாநிதி மகிழ்ச்சி: செம்மொழி மாநாடுக்கு புலிகள் ஆதரவு: பாராட்டுகிறார்

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=23282

சென்னை: “தமிழ்ச் செம்மொழி மாநாட்டிற்கு வரவேற்பு தெரிவித்துள்ள, விடுதலைப்புலிகளின் அறிக்கையைக் கண்டு மகிழ்ச்சியடைவதோடு, அவர்களைப் பாராட்டுவதாக’ முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார். அ.தி.மு.க., – ம.தி.மு.க., உள்ளிட்ட கட்சிகள், இலங்கை பிரச்னையை காரணம் காட்டி, செம்மொழி மாநாட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், செம்மொழி மாநாட்டுக்கு ஆதரவு தெரிவித்து விடுதலைப் புலிகள், “திடீர்’ அறிக்கை வெளியிட்டுள்ளனர். புலிகளின் இந்த அறிக்கை, நேற்றைய, “தினமலர்’ நாளிதழில் வெளியானது. புலிகளின் இந்த திடீர் அறிக்கை, உலகத் தமிழர்கள் மத்தியிலும், தமிழக அரசியலிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், “இந்த அறிக்கையைக் கண்டு மகிழ்ச்சியடைவதாகவும், அவர்களைப் பாராட்டுவதாகவும்’ முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.

இது குறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: கோவையில் நடக்கும் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டுக்கு வாழ்த்து வழங்கி, அந்த வாழ்த்தினூடே ஈழத் தமிழ் இனம் படுகிற இன்னல்களைச் சுட்டிக்காட்டி, அம்மக்களுக்கான நீதியைப் பெற்றுக் கொடுக்கும் பொறுப்பு, செம்மொழி மாநாட்டை நடத்துபவர்களுக்கு உண்டு என நம்புகிறோம் என்ற நம்பிக்கையையும் தெரிவித்து வெளியிட்டுள்ள அறிக்கையைக் காணும் வாய்ப்பைப் பெற்றேன். “தமிழ் மொழியின் எதிர்கால வளர்ச்சிக்காக நடத்தப்படவிருக்கும் செம்மொழி மாநாட்டுக்கு எங்கள் ஆதரவு உண்டு; இந்த மாநாடு தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு வழிகோலும் என்பதுடன், உலகம் முழுவதும் வாழும் தமிழர்களின் ஒன்றுபட்ட நிலைக்கு, வலு சேர்க்கும் வகையில் அமைய வேண்டும் என்பதே எமது அவா’ என்றும் சுட்டிக் காட்டப்பட்டிருக்கிறது. அந்த அறிக்கையில் எந்த எதிர்பார்ப்பும், குறிக்கோளும் ஒளி விடுகிறதோ அவற்றைக் காண வேண்டும், கண்டு களிக்க வேண்டும் என்ற ஆவலில், இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ள அமைப்பின் கருத்துக்களில் எள்ளளவும் வேறுபாடும் எமக்கில்லை என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன்.

“இலங்கையில் நடந்த அவலத்தை, அருகில் இருந்த தமிழர்களால் தடுக்க முடியவில்லை என்ற வேதனை நமக்கு உண்டு’ என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருப்பது தான் தேவையற்ற விவாதத்துக்கு இடமளித்து விடுமோ என்று அஞ்சுகிறேன். சிங்கள ராணுவத்தால் அப்பாவித் தமிழர்கள் கொல்லப்படுகின்றனர் என்று தமிழகம் முழுவதும் கண்டனக் குரல்கள் எழுந்தபோது, “அவர்கள் யாரும் அப்பாவிகள் அல்ல’ என்று கூறியதோடு, அவர்கள் சாகத்தான் வேண்டுமென்று சாபமிட்டவர்கள் யாரோடு கூடிக் குலவினர், இன்னமும் குலவிக் கொண்டிருக்கின்றனர் என்பதை, அறிக்கை வெளியிட்ட அந்த அமைப்பு ஒருகணம் எண்ணிப் பார்க்க வேண்டும். உண்மைகள் ஆயிரம், ஒவ்வொன்றாக எதிர் நின்று சதி செய்த சண்டாளர்கள் யார் என்பதற்கு சாட்சியங்கள் கூறும்.

இந்த நேரத்தில், மேலும் அதை விளக்க விரும்பவில்லை. உண்மை எப்போதும் உறங்கிவிடாது; ஒரு காலத்தில் உதறிக்கொண்டு, எழுந்து பேசத்தான் போகிறது. இதற்கிடையே, எனக்குள்ள மகிழ்ச்சியெல்லாம், இங்கே சிலர் பாரதத்து காந்தாரி போல பதறித் துடித்து, ராமாயணத்து கூனி போல பாட்டாபிஷேகத்தையே தடுத்து நிறுத்த பகிரங்கமாகவே அறிக்கை விட்டுக் கொண்டிருக்கும்போது, “இதோ தமிழர்கள் நாங்கள்; எங்கிருந்தாலும், எப்படியிருந்தாலும், தமிழ் மொழியின் எதிர்கால வளர்ச்சிக்காக நடக்கும் செம்மொழி மாநாட்டிற்கு எங்கள் ஆதரவு என்றும் உண்டு’ என்று அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

“தமிழ் மொழியின் வளர்ச்சிக்கும், எங்கள் இனத்தின் ஒற்றுமைக்கும் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு உறுதுணையாக இருக்கும் என நம்புகிறோம், வாழ்த்துகிறோம்’ என்று உளம் திறந்து அறிக்கை ஒன்றை வெளியிட்டிருப்பது கண்டு மகிழ்ச்சியடைவதோடு, அவர்களைப் பாராட்டுவதும் கடமை எனக் கருதுகிறேன். இவ்வாறு கருணாநிதி தெரிவித்துள்ளார். விடுதலைப்புலிகளின் அறிக்கையை வரவேற்று, முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கையின் எந்த இடத்திலும், “விடுதலைப்புலிகள்’ என்ற வாசகத்தை பயன்படுத்தாமல், “அமைப்பு’ என்று மட்டும் குறிப்பிட்டுள்ளார்.

LTTE-support-semmozhi-conference

LTTE-support-semmozhi-conference

புலிகள் அமைப்பின் முக்கிய பிரமுகர் கைது

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=22752

சென்னை : விடுதலைப்புலிகள் அமைப்பின் முக்கிய பிரமுகர், காஞ்சிபுரத்தில் கைது செய்யப்பட்டார். விடுதலைப்புலிகள் அமைப்பின், தமிழக தலைவராக செயல்பட்டவர் சிரஞ்சீவி (36). தமிழகத்திலிருந்து உளவு தகவல்களை புலிகளுக்கு அனுப்பி வந்தார். கடந்த 2007ம் ஆண்டு, வெடிகுண்டு தயாரிக்க தேவையான மூலப்பொருட்களை ராமேஸ்வரத்திலிருந்து, இலங்கைக்கு அனுப்பிய வழக்கில் தேடப்பட்டு வந்தார்.மேலும், 2008ம் ஆண்டு சென்னையிலிருந்து உலோக பைப்புகளை, இலங்கைக்கு அனுப்பிய வழக்குகளிலும் சிரஞ்சீவியை, “கியூ’ பிரிவு போலீசார் தேடி வந்தனர். போலீசார் தேடுவதை அறிந்து, இலங்கைக்கு தப்பி சென்ற சிரஞ்சீவி, மீண்டும் தமிழகத்திற்கு வந்து பதுங்கியிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.காஞ்சிபுரத்தில் பதுங்கியிருந்த சிரஞ்சீவியை, “கியூ’ பிரிவு போலீசார் கைது செய்தனர். கைதான சிரஞ்சீவி, ஆலந்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். சிறப்பு அனுமதியின் பேரில், பூந்தமல்லி சிறப்பு அகதிகள் முகாமில் வைக்கப்பட்டுள்ள சிரஞ்சீவியிடம், “கியூ’ பிரிவு போலீசார் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.